பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் அறிவிப்பு! - சென்னை செய்திகள்
16:03 February 27
சென்னை: அதிமுக - பாமக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில் பாமகவிற்கு 23 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதையடுத்து அதிமுக - பாமக இடையே கூட்டணி இறுதியானது. அதனை உறுதி செய்யும் வகையில், இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ”கொடுத்தார்கள், அதனால் மீண்டும் வென்றார்கள்! வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள். அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து சென்னை லீலா பேலஸ் விடுதியில் அதிமுக - பாமக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ், மற்றும் முன்னணி தலைவர்கள், பாமக சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு முடிவு எட்டப்பட்டுள்ளது. 23 முதல் 27 தொகுதிகள் வரை பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடுத்தார்கள்... அதனால் வென்றார்கள்- ராமதாஸ் ட்வீட்