சென்னை : உலக நாடுகளில் 2019ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் கரோனா வைரஸின் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்தாண்டு (2020) ஒருவர் பின் ஒருவராக சர்வதேச நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன.
இந்தியாவிலும் பொதுமுடக்கம் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. தற்போது மாநில அரசுகள் தளர்வுடன் ஊரடங்கு, தளர்வில்லா ஊரடங்கு என பொதுமுடக்கத்தை அவ்வப்போது நோய்த்தொற்று பரவலுக்கு ஏற்ப நீட்டித்துவருகின்றன.
கல்வி நிறுவனங்கள் மூடல்
எனினும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து பூட்டப்பட்டுள்ளன. சுவாமி தரிசனம் ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் கல்வியும் ஆன்லைனில் போதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் வாக்கில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவியது. இது நாடு முழுக்க பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய நிலையில் கல்வி நிறுவனங்களை திறப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடி பேட்டி
இதற்கிடையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ஜூலை 31ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து, “ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” எனவும் தெரிவித்திருந்தார். இதனால் ஆகஸ்டில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு பெற்றோர் உள்பட அனைவரிடமும் எழுந்துள்ளது.
அன்பில் மகேஷ் பதில்
இதற்கிடையில் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.
முன்னதாக பள்ளிகள் திறப்பது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பெற்றோர் மத்தியில் கரோனா அச்சம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : +2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது - பொன்முடி