தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 7 கோடியே 50 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதேபோல், 2019-20 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், கருவி இசை பிரிவில் விஸ்வாஸ் முதல் பரிசும், வண்ண ஓவியம் தீட்டுதல் பிரிவில் வசந்த் முதல் பரிசும், கருவி இசை பிரிவில் அம்சவர்த்தினி மூன்றாம் பரிசும் வென்றனர். அவர்களுக்கு ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டன.