தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போக்குவரத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு என்று அழுத்திக்கூறிய ஜெயக்குமார் - chennai

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதாக இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலா டிடிவி ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதாக இல்லை
சசிகலா டிடிவி ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதாக இல்லை

By

Published : Aug 16, 2022, 8:26 PM IST

சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்துப் பிரிவின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "இந்த விடியா திமுக அரசு கண்டும் காணாமல் தொழிலாளர் விரோதப்போக்கினை கடைப்பிடித்திருக்கிறது. நமது போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய நியாமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, அதுபோல எடப்பாடியார் ஆட்சிக் காலத்திலும் சரி போக்குவரத்து தொழிலாளர்களுக்குப் பொற்காலம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது.

ஆனால், இன்றைக்குப் போக்குவரத்து தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடுகின்ற அளவில், தன்னையே வருத்தி இன்றைக்கு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையான அளவுக்குக் காற்றிலே பறக்கவிட்டு ஒரு தொழிலாளர் விரோதப்போக்கினை இந்த ஆளும் விடியா அரசு கடைப்பிடித்திருக்கின்றது. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்கள்.

14ஆவது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே முடிவுக்குக்கொண்டு வரவேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டிஏ மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். நிலைக்குழுவில் ஏடிபியை சேர்க்காமல் அரசாணை வெளியிட்டதைத் திரும்பப் பெறவேண்டும். அம்மாவின் அரசில் ஏடிபி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு: போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக்கண்டிக்கும் வகையிலும், அதே போன்று அம்மாவின் அரசில் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்ற கொள்கையினை இப்போது செயல்வடிவம் கொடுக்கவேண்டும் என்றும் இந்த ஆறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

81ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு டிஏ-வை இன்னும் வழங்காமல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலை செய்துள்ளது. இந்த கோரிக்கைகளைப் பல முறை எடுத்துச்சொல்லியும் கூட, ஆளும் விடியா அரசு செவிசாய்க்காமல் செவிடன் காதில் ஊதிய சங்குபோல எவ்வளவு சொன்னாலும் கேட்காத காரணத்தினால் இன்றைக்கு நம்முடைய தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சாம்பிள்தான். இந்த விடியா அரசு இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குச் செவி சாய்க்கவில்லை என்றால் ஒரு மாபெரும் போராட்டத்தைத் தொழிலாளர்கள் நலன் கருதி எடப்பாடியார் அறிவிப்பார். அதிமுக ஒரு மகத்தான இயக்கம். பல லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்ற இயக்கம். இப்படிப்பட்ட பேரியக்கத்தைச் சார்ந்த அண்ணா தொழிற்சங்க பேரவையைச் நிலைக்குழுவில் சேர்க்காமல் வெளியிட்ட அரசாரணையை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நீதிமன்றம் செல்வது குறித்து அண்ணா தொழிற்சங்கப்பேரவை முடிவு செய்யும். போராட்டத்தில் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது ஒருபக்கம். ஆனால், அதே நேரத்தில் அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு இந்த விடியா அரசு எங்களைத் தள்ளக்கூடாது. தொடர்ந்து இதுபோன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் கட்சி எடுக்கும் முடிவு குறித்து நாங்கள் தெரிவிப்போம்.

நாங்கள் தெற்காசிய விளையாட்டுப்போட்டியை நடத்தினோம். ஏதாவது சிறிய பிரச்னை இருந்ததால், அன்றைக்குப் பிரதமர் நரசிம்மராவை அழைத்துவந்து நடத்தினோம். நான் அன்றைக்கு அமைச்சராக இருந்தேன். ஒரு சிறிய பிரச்சனை கூட இல்லை. இதுபோன்ற எந்த கருத்தும் வரவில்லை. ஆனால் 2006 -11இல் செம்மொழி மாநாட்டை நடத்தினார்கள். அப்போதும் இதே பிரச்னை தானே வந்தது. செம்மொழி மாநாட்டிற்கு 400 கோடிக்கும் மேல் செலவு செய்தார்கள் என்று சொன்னார்களே. அந்த கணக்கு எல்லாம் எங்கே போனது.

ஒரு உணவகத்துக்கு 10 நாட்களில் 30 கோடி செலவு என்றால், அதற்கு ஒரு உணவகத்தைக் கட்டிவிடலாமே. சாப்பாடு செலவு இல்லாமல் ஹோட்டலுக்கு 30 கோடி பில் என்றால் இது குறித்து ஒரு சந்தேகத்தை மக்கள் எழுப்புகிறார்கள். பத்திரிகையில், சமூக ஊடகத்தில் சந்தேகத்தை எழுப்புகிறார்கள் என்றால் அதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. தெளிவுபடுத்த வேண்டியதுதான் அமைச்சரின் கடமை. இதற்கு ஏன் எங்கப்பன் குதிரைக்குள் இல்லை என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். அப்படி என்றால் ஏதோ இருக்கிறது என்றுதான் நினைக்கத்தோன்றும்.

பேரவைத்தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்யவேண்டாம்: அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேரவைத்தலைவர் கூறியிருக்கிறார். அவர் பேரவைத் தலைவர் பணியை ஒழுங்காகச் செய்யட்டும். கட்டப்பஞ்சாயத்து வேலையைப்பார்க்க வேண்டாம். அவர் இதனை ஏன் தெரிவிக்கிறார். பேரவைத் தலைவர் வேலையைச் செய்கிறரா. அல்லது கட்சி வேலையைச் செய்கிறாரா.

இதுபோன்ற கருத்தைக் கட்சியினர் தெரிவிக்கலாம். பேரவைத் தலைவரின் மாண்பை இன்றைக்குச் சிதைத்துள்ளார். நானும் பேரவைத் தலைவராக இருந்துள்ளேன். என்ன விதிகளில் உள்ளதோ அதன்படிதான் செயல்பட்டேன். அதனைத் தாண்டி நான் சென்றதில்லை. அவர் கட்டப்பஞ்சாயத்து ராஜா என்பதால் துறு துறு என்று இருக்கிறது.

ஆளுநர் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்தி என்று ஓ.பன்னீர்செல்வம் குழு சென்றுள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தச்சொல்லுங்கள் பார்க்கலாம். ஆயிரம் பேரைத் திரட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று சொல்லிக்கொண்டு இன்றைக்கு உங்களுடைய சுயரூபம் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரிகிறது. யார் அழைத்தாலும் விடிய, விடிய பாய் போட்டு படுத்துக்கொள்வார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. கட்சியிலும் அவர் கிடையாது. யாராவது ஒருவர் அழைக்கமாட்டார்களா என்று முந்திக்கொண்டு பாய் போட்டுப் படுத்துவிடுவதுதான் அவர் வேலை. டிடிவி தினகரன் எங்கள் இயக்கத்தைப் பற்றிப் பேச எந்த முகாந்திரமும் இல்லை. எங்களால் தான் அவர்கள் தோற்றார்கள் என்று சொல்கிறார்.

சசிகலா டிடிவி ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதாக இல்லை

இரட்டை இலை என்ற உப்பைத் தின்று, எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தால், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தால் உண்டு கொழுத்தவர்கள் இன்று அதிமுகவை விமர்சனம் செய்வது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் இன்று எழுச்சியோடு உள்ளது. கட்சியின் எழுச்சியைப் பொறுக்க முடியாமல், கடந்த காலங்களில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்று, அம்மாவின் அரசு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் பல சதிகளைச் செய்தது அனைத்தும் இன்றைக்குத் தொண்டர்களுக்குத் தெரியும்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் மொத்தம் 80 பேர்தான் உள்ளார்கள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல உலகத்திற்கே தெரியும். மாபெரும் சக்தி யார் என்று. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் கட்சி இன்றைக்கு வீறு நடைபோட்டு வருகிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் சேர்த்துக் கொள்வதாக இல்லை.

’சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதாக இல்லை’:சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரிடம் கூட்டுச் சேர்கிறார்களோ அவர்களிடத்தில் தான் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கவேண்டும். தேர்தல் வரட்டும். அந்த நிலைப்பாட்டை அவர் எடுக்கட்டும். எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரைச் சந்திப்பது என்பது நிச்சயமாக மாநிலத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்காது. வெளியில் எங்களைப் போன்று மத்திய அரசை எதிர்க்க ஆள் இல்லை என்று பேசுவார்கள். மாநில சுயாட்சி குறித்துப் பேச எங்களைப்போல வேறு யாரும் இல்லை என்று பேசுவார்கள்.

எங்களைப் போல மாநில உரிமைக்குப் போராடுபவர்கள் யாரும் கிடையாது என்பார்கள். ஆனால் அத்தனை உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டார்கள். மத்தியில் மண்டியிடுகின்ற வேலையைத்தான் ஆளும் விடியா திமுக அரசு செய்து வருகிறது. மண்டியிடும் வேலையின் தொடர்ச்சியாக்கத்தான் இன்று அவர் டெல்லி சென்றுள்ளார்.

இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதியை எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்தார் என்று எங்களால் சொல்ல முடியும். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்று எங்களால் பட்டியிலிட முடியும். ஆனால், இவர்கள் சென்று பார்க்கிறார்கள். இதனால் என்ன பயன் கிடைத்தது.

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் கட்டிக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா. இவர்கள் மண்டியிடும் வேலையைத்தான் செய்வார்கள். ஸ்டாலின் பிரதமர் சந்திப்பு என்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது. வேறு வகையான சந்திப்புகளுக்கு அது காரணமாக இருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அண்ணா குறிப்பிட்டது போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கப் அண்டு சாசர் போல. எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவேண்டும். ஆனால் ஏளனப்படுத்துவது, ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைச் சொல்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள். அவர்கள் எந்த வார்த்தையைப் பேசினாலும் அதனைவிட 10 மடங்கு வார்த்தைகளைப் பேச எங்களுக்குத் தெரியும்.

ஓபிஎஸ் சுயேச்சை எம்.எல்.ஏ தான்: நாங்கள் கோயிலாக மதிக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையை காலால் எட்டி உடைத்து ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் தானே எடுத்துச்சென்றார்கள். இவை அனைத்தும் காவல்துறையினரின் துணை இல்லாமல் நடக்குமா. திமுக ஓ.பன்னீர்செல்வத்தை முடுக்கி விட்டுள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் திமுக என்ன சொல்கிறதோ அதனைச் செய்வார்.

கட்சியை விட்டு நீங்கினால் அவர் சுயேச்சை என்று விதிகளில் தெளிவாக உள்ளது. அவர் சுயேச்சை எம்ஏல்ஏ தான். இத்தைதான் பேரவைத் தலைவர் செய்ய வேண்டும். உண்மையில் இதனை அவர் செய்தால் மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லலாம். செய்யவில்லை என்றால் மாண்பு இல்லாத பேரவைத்தலைவர் என்றுதான் நிச்சயமாக சொல்ல முடியும்.

இந்த விடியா அரசு தேர்தலுக்கு முன்னர் அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். அதுபோல போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்கள். என்ன செய்தார்கள் இவர்கள். அரசு ஊழியர், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவன தொழிலாளர்களும் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடும் நிலைமை.

இல்லதரசிகளுக்கு ரூ.ஆயிரம் தருவோம் என்றார்கள், அளித்தார்களா. சிலிண்டருக்கு மானியத்தை அளித்தார்களா, கல்விக்கடன் ரத்து என்றார்கள். இப்போது அனைவருக்கும் ஜப்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டுவருகிறது. நகைக் கடன் தள்ளுபடியில் ரூ.15 லட்சம் பேரை நீங்கள் காலி செய்துவிட்டீர்கள். மதுவை ஒழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். எந்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்கள். பொருளாதார மேதைகளைப் போட்டார்கள். என்ன ஆனது.

எம்.ஜி.ஆர் பொருளாதார மேதைகளை வைத்தா ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா பொருளாதார மேதைகளை வைத்தா ஆட்சி நடத்தினார்கள். எடப்பாடியார் இப்படியா செய்தார். மக்களின் நாடித்துடிப்பை அறிந்து மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்தார்கள். ஆனால், இந்த ஆட்சிக்கு அறிவு இல்லையா. ஆட்சிக்கு சுய புத்தி இல்லையா.

அந்த குழுவைப் போட்டு ஒருவருடம் ஆகிறது. இதுவரை என்ன நடந்தது. அந்த அறிக்கையை வெளியிடுங்கள். சர்வாதிகாரி என்று அவர் சொல்கிறார். தொழிலாளர் விரோதப்போக்கில் அவர் சர்வாதிகாரிதான். விவசாயிகளின் விரோதப்போக்கில் சர்வாதிகாரி, மீனவர்களின் விரோதப்போக்கில் சர்வாதிகாரி" எனக் கூறினார்.

இதையும் படிங்க:மதுவை விற்று தான் ஆட்சியை நடத்தனுமா.. அன்புமணி ராமதாஸ்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details