கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து, முடித்திருத்தகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய்வரை, மாத வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாயுமின்றி, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, வருவாயில்லாமல் இருக்கும் மாநிலம் முழுவதுமுள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சலூன் கடைகளையும் உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.