சென்னை: விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'வட அமெரிக்க தமிழ்ச்சங்கம் சார்பில் விழாவில் கலந்துகொள்ள செல்கிறேன். குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள யஸ்வந்த் சின்காவை வெற்றி பெற வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்துள்ளது.
பாஜக அடையாள அரசியலை உயர்த்திப்பிடித்து உள்ளது. பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துகிறோம் என்று பழங்குடி மக்களின் பாதுகாவலர்போல் காட்டிக்கொள்கிறது.
நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து உள்ள நிலையில் கே.ஆர். நாராயணன்போல் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையும் அரசியலமைப்புச்சட்டத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒருவரை குடியரசுத்தலைவராக தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் யஸ்வந்த் சின்காவை நிறுத்தி உள்ளோம்.
யஸ்வந்த் சின்காவின் வெற்றி நாட்டின் பாதுகாப்பை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்தும். அவருக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து யஸ்வந்த் சின்காவிற்கு வாக்களிக்க வேண்டும்.
மராட்டிய மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை, பாஜக சிதறடித்துள்ளது. சிவசேனாவை உடைத்த அநாகரிக அரசியல் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தாகும். பாஜக-வின் போக்கை பொதுமக்கள் புரிந்து கொண்டு தனிமைப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.