இதுகுறித்து சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டை போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். அதேபோல கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு. திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள். ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள். ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக் டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.