சென்னை:திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(31), என்பவர் மர்ம நபர்கள் இருவரால் நேற்று(செப்.06) மாலை 7 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி ஓலை சரவணன் நேற்று மாலை வீட்டிலிருந்து தனது மனைவியோடு காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு நபர்கள் மனைவி கண்முன்னே, ரவுடி ஓலை சரவணனை தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் இது குறித்து ஓலை சரவணன் மனைவி திருவான்மியூர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் சரவணனின் மனைவி கூறிய போது, கொலை செய்ய வருவதை உணர்ந்து கொண்ட சரவணன் தன்னை தள்ளிவிட்டு தனது உயிரை காப்பாற்றியதாக கூறியுள்ளார். மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடினர். சரவணன் சமீபத்தில் கடந்த மே மாதம் தான் வழக்கு ஒன்றில், சிறை சென்று வெளியில் வந்துள்ளார்.