சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், வீரபத்திரன் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மனோநிதி. இவரது வீட்டில் இன்று (செப் 4) இரவு சுமார் 10.22 மணியளவில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், வெடிகுண்டின் துகள்களை சேகரித்தனர். பின்னர் தடயவியல் துறை உதவி இயக்குநர் சோபியா நிகழ்விடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
வழக்கறிஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடிகள் - Lawyer
சென்னை: பள்ளிக்கரணை அருகே வழக்கறிஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வெடிகுண்டு வீசிய ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர். முன்னதாக பெரும்பாக்கம், மேட்டுத்தெருவில் ராஜசேகர் என்ற நபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருண், விக்கி, அரவிந்த், உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே ராஜசேகரின் உறவினரான ராஜேஷ் வழக்கறிஞர் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து வெடிகுண்டு வீசி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தால் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் சம்பவம் இடத்தில் விரைந்து வந்து, மேலும் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு காவலர்களை குவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக வழக்கறிஞரின் தாயாரும், வேங்கைவாசல் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வனஜா தனசேகரன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.