சென்னை: ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியிலுள்ள மலைமேல் பாறையை குடைந்து கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாதர் குடவரை கோயிலில், 24 அடி நீளத்தில் அனந்தசயன நிலையிலான பெருமாளின் உருவம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைகோட்டையிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல, 120 படிகள் உள்ள நிலையில், கோயிலுக்கு சாலை அமைப்பதாக கூறி, உள்ளூர் எம்.எல்.ஏ., ஆதரவுடன், பாறையை வெடி வைத்து தகர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சாலை அமைக்கவோ, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவோ எந்த அனுமதியும் இல்லாமல் பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 35 வருடத்தில் 6 கோயில்களை மட்டுமே, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தொல்லியல்துறை அறிவித்துள்ளதாலும், 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த கோயிலையும் அறிவிக்காததாலும் புராதன கோயில்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோயில் பகுதிகளில் குவாரி பணிகளை மேற்கொள்ளவும், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டுமெனவும், அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். சட்டவிரோத பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை கோரிய புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.