தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு - ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ரகசிய அறிக்கையை திமுக வேட்பாளர் பார்வையிட அனுமதிப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Nov 15, 2019, 12:37 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், ஆர்.கே நகர் தேர்தல் அலுவலர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக வேட்பாளர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை சார்பில் சீல் வைக்கப்பட்ட உறையில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரரால் விசாரணையின் உண்மை விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் டைரியும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details