சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 30) தலைமைச் செயலகத்தில், நிதித் துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நிதித் துறையின்கீழ் செயல்படும் துறைகளான
- கருவூலம் மற்றும் கணக்குகள்,
- ஓய்வூதியம்,
- உள்ளாட்சி நிதித் தணிக்கை,
- கூட்டுறவுத் தணிக்கை,
- துறைத் தணிக்கை மற்றும் நிறுவனத் தணிக்கை,
- அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு
ஆகியவற்றின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஆய்வுமேற்கொண்டார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பெறப்பட்ட நன்கொடைகள், அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்ட ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின் தற்போதைய நிலை குறித்தும், மே 8 முதல் ஜூலை 28ஆம் தேதிவரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டு, ரூபாய் 305 கோடிக்குக் கரோனா நோய்த்தொற்றுத் தொடர்பான பணிகளுக்குச் செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.
- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை,
- பயன்பெற்றுவரும் பயனாளிகளின் விவரங்கள்,
- சார்நிலைக் கருவூலங்களின் செயல்பாடுகள்,
- அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள்
ஆகியவை குறித்தும் ஆய்வுமேற்கொண்டார். தணிக்கை முறைகளை வலுப்படுத்தி, தணிக்கைத் தடைகள் எழாத வண்ணம், சிறந்த நிருவாகத்தை ஏற்படுத்திடவும், நிலுவையிலுள்ள தணிக்கைப் பத்திகளின் தற்போதைய நிலையினைக் கண்காணித்திடவும் அறிவுறுத்தினார்.