தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா கால மருத்துவர்கள், பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை - கரோனா கால மருத்துவர்கள்

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு அரசிற்கு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Doctores
Doctores

By

Published : Nov 25, 2021, 4:57 PM IST

சென்னை : கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது எனவும், அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக தமிழ்நாட்டில் பரவி மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கியக் காலக்கட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

பணி நீக்கம் சரியல்ல..
கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும்,கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களிலும், சிகிச்சை வழங்குவதிலும் மிகுந்த ஈடுபாட்டு உணர்வோடு் பணியாற்றியுள்ளனர். கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது உயிரையும் துச்சமென கருதியும், அர்ப்பணிப்போடு பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.

கோவிட்
இந்நிலையில் இம்மாத இறுதியுடன் பணியிலிருந்து நின்று விடுமாறு, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த மன வேதனையை தருகிறது. கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்தவர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல.

மீண்டு(ம்) கரோனா அச்சுறுத்தல்

தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், மூன்றாவது அலை வரும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே அவசரப்பட்டு தற்காலிக மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வது நல்லதல்ல.

மீண்டும் கரோனா எச்சரிக்கை
கரோனாவைத் தவிர, டெங்கு ,நோரா வயிற்றுப் போக்கு போன்றவையும், மழைக்கால நோய்களும் அச்சுறுத்தும் நிலையிலும், முதுநிலை மருத்துவர்களுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமாகும் நிலையிலும் , மருத்துவ மனிதவள பற்றாக் குறையை சமாளிக்க, அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கோரிக்கை
எனவே, மனித நேய அடிப்படையிலும், பெருந்தொற்று காலத்தை கணக்கில் கொண்டும் , தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், பணி நீட்டிப்பும், பணிப் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்களை, மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு
ஊழியர்களின் ஊதியத்திற்காக என்.எச்.எம் (NHM) மூலம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கூடுதல் நிதியை தமிழக அரசும் ஒதுக்கீடு செய்து,மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை பணியாளர் களையும் , தமிழ்நாடு அரசே நேரடியாக ,மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் மூலம் ,நிரந்தர அடிப்படையில் நியமிக்க முன்வர வேண்டும்” என அதில் கூறியுள்ளனர். இதையும் படிங்க :ஒடிசாவில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details