தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிற்கல்விப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு: விரைவில் அறிக்கை தாக்கல் - etvbharat

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்

By

Published : Jul 14, 2021, 9:58 AM IST

Updated : Jul 14, 2021, 2:45 PM IST

09:44 July 14

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் அறிக்கை தயார்செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாளையோ, நாளை மறுநாளோ வழங்கப்பட உள்ளது.

சென்னை:2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 

அதேபோன்று பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள்

இந்நிலையை சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான முதல் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்ந்துள்ள விவரங்களை அந்தத் துறையினர் அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

அதனைத்தொடர்ந்து இந்தக்குழுவின் இரண்டாவது கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை நேற்று (ஜூலை 13) டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் இறுதி செய்துள்ளனர்.

அந்த அறிக்கையை முதலமைச்சரிடம் நாளையோ அல்லது நாளை மறுநாளோ அளிப்பதற்கு நேரம் கேட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் அளித்த பின்னர் அறிக்கைத் தாக்கல்செய்யப்படுகிறது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் உள்ளதுபோல், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை

மேலும் தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிகிறது. 

இதையும் படிங்க: 'நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்'

Last Updated : Jul 14, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details