தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Exclusive: ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை என்ன?

வடகிழக்குப் பருவமழையால் சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள ஏரிகள் நிரம்பி வெள்ள இடர் ஏற்பட்டுவருவதால் ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சென்னை புறநகர் ஏரிகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வு
சென்னை புறநகர் ஏரிகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வு

By

Published : Aug 7, 2021, 6:30 AM IST

Updated : Aug 7, 2021, 9:07 AM IST

சென்னை: தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். 2015, 2017ஆம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெய்த கடும் மழையினால் புறநகர்ப் பகுதிகளிலுள்ள எரிகளான சிட்லபாக்கம், செம்பாக்கம், சேலையூர், நன்மங்கலம் ஏரிகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள கிராமங்களின் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததில் சேதமடைந்தது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியபோது, "சென்னையின் தென் புறநகர் பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. எனினும் இந்த ஏரிகள் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு குளங்களாக மாறிவிட்டன. உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சிட்லபாக்கம் ஏரி ஒரு காலத்தில் பாசனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கியது.

ஏரிகளில் பராமரிப்புப் பணிகள்

அந்தப் பகுதிகளில் விவசாயம் அதிக ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுப்பணித் துறை அலுவலர்கள் நீர்நிலைகளில் சரியாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை நீர்நிலைகளைச் சீரமைக்கக் கோரியும், புறநகர்ப் பகுதியில் எந்த ஒரு வேலையும் சரியாக நடக்கவில்லை" எனக் கவலை தெரிவித்தனர்.

சமூக ஆர்வலரான பி. விஸ்வநாதன் கூறுகையில், "சிட்லபாக்கம் ஏரிகளில் உள்ள தண்ணீர் மாசுபடாமல் இருக்கும்விதமாக முதலில் ஏரிகளில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும். மேலும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தூர்வாரும் பணியை பகுதி பகுதியாக மேற்கொள்ள வேண்டும். இந்த வருட வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளே உட்புகாமல் இருக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதேபோல வேளச்சேரி குடியிருப்புகள் நலச்சங்கத்தின் தலைவர் குமார ராஜா கூறுகையில், "வேளச்சேரி என்பது பணக்காரர்கள் வசிக்கக்கூடிய இடம். அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் உள்ள இடம் என்று கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்க வேளச்சேரிக்கு மழைக்காலங்களில் வெள்ளமும் வருவது உண்டு.

ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளின் நிலை

வேளச்சேரி ஏரியிலிருந்துவரும் உபரிநீர், அந்தப் பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குச் செல்கிறது. சதுப்பு நிலத்தில் கழிவுநீர், குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் முரளிதரன் கூறுகையில், "அனைத்து நீர்நிலைகளிலும் பராமரிப்புப் பணிகளான தூர்வாருதல், ஏரிகளிலுள்ள நுழைவாயில்கள், உபரிநீர் வெளியேறும் வாயில்கள் அடைப்பின்றி இருக்கும்விதமாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் பழுது நீக்கும் பணிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மழைக்காலங்களில் வெள்ளத்தைத் தடுக்கும் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கொடைக்கானல் புதிய கட்டுப்பாடு - சுற்றுலாப் பயணிகள் குழப்பம்'

Last Updated : Aug 7, 2021, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details