அரியலூர் மாவட்டத்தில், அரசு நிலத்தில் செயல்பட்டுவந்த தனியார் சிமென்ட் ஆலையை காலி செய்யும்படி மாவட்ட சார் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், சிமெண்ட் ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.