சென்னை: அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில், தமிழர் இறையாண்மை நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். பின், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் நாளை, "தமிழ்நாடு நாள்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது பொருத்தமானது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாக, அரசு சார்பில் கொண்டாடும் வகையில் அதனை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், ஜூலை 18 ஆம் நாளை, தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவதற்கான அரசாணையை வெளியிடுவதற்கு முன், எல்லை மீட்புப் போராளிகள், தமிழறிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து, ஒருமித்த கருத்துடன் பிற்காலத்தில் கருத்து முரண் ஏற்படாத வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.
வன்னியர் இட ஒதுக்கீடு - நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ளத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. 10.5% இட ஒதுக்கீடு அவசர கோலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும் பாமகவும் இணைந்து அறிவித்துவிட்டார்கள்.
அதன் விளைவுகளை, அன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சுட்டிக்காட்டியது. இந்த இட ஒதுக்கீடு சட்ட மசோதா தற்காலிகமானது தான் என்று அன்றைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். எனவே, ஓட்டுக்காக ஆடிய நாடகம் என்று அப்போதே வெளிப்பட்டது.