தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரவுடிகள் புகலிடமாக ஆகிறதா கமலாலயம்? சர்ச்சையைக் கிளப்பும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை! - பாஜக

சென்னை: பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பிய பல ரவுடிகள் அண்மைக்காலமாக பாஜகவில் சேர்ந்து வருவது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ரவுடிகளை கட்சியில் சேர்ப்பது பாஜகவின் திட்டமிட்ட ஒன்று என்று பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

rowdies
rowdies

By

Published : Sep 5, 2020, 8:12 PM IST

அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜகவில் நிகழ்வதை பார்க்கும்போது, புதுப்பேட்டை திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. கல்வெட்டு ரவி, சத்தி என்ற சத்தியராஜ், முரளி என்ற முரளிதரன் இப்பெயர்களெல்லாம் அப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் தோன்றினாலும், இவர்கள் அனைவரும் அண்மையில் பாஜகவில் இணைந்தவர்கள். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ‘பாஜகவில் அனைவரும் இணையலாம். அவர்களின் பின்னணி குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை ‘ என்று பேசினார். எல்.முருகனின் பேச்சு யாருக்கு புரிந்ததோ இல்லையோ, தமிழ்நாட்டின் பல பகுதிகளை கதிகலக்கிய ரவுடிகளுக்கு நன்கு புரிந்திருக்கிறது.

’ மீன்பிடி படகுகள் மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருபவர்தான் கல்வெட்டு ரவி. ஏராளமான இளைஞர்களின் எதிர்காலமாக ரவி இருக்கிறார் ‘ இப்படி கூறியவர் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன். இவர் முன்னிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தார். கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் கொலை, ராயபுரம் ஃபிரான்சிஸ் கொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் கொலை போன்றவை உள்பட 35 வழக்குகளுடன், 6 முறை குண்டர் சட்டத்திலும் சிறை சென்றவர்தான் ரவுடி கல்வெட்டு ரவி. அவரோடு கட்சியில் இணைந்த ரவுடி சத்தி என்ற சத்தியராஜ் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன. இவரும் இருமுறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றவர்.

ரவுடிகள் கல்வெட்டு ரவி மற்றும் சத்தியராஜ் பாஜகவில் இணைந்தபோது...

இவர்கள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவுடி முரளி என்ற முரளிதரனும், பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோபா செல்வம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 5 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவரான ரவுடி முரளிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பணமதிப்பிழப்பின் போது கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் வைத்திருந்ததாக சிக்கி, அப்போது பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ரவுடி அருண் என்பவரும், தற்போது கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டு அவருக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த ரவுடி முரளி (எ) முரளிதரன்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வண்டலூரை அடுத்த ஓட்டேரியில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு, நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சூர்யா தனது கூட்டாளிகளுடன் கட்சியில் இணைவதற்காக வந்தார். ஏற்கனவே ஏழு கொலை வழக்குகள் உள்பட 59க்கும் மேற்பட்ட வழக்குகளில் காவல்துறையால் தேடப்படும் ரவுடி சூர்யா, அங்கு வருவதை அறிந்த ஓட்டேரி காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். காவலர்கள் வருவதை தெரிந்து கொண்ட ரவுடி சூர்யா, தனது காரை அங்கேயே விட்டுவிட்டு, பாஜக மாநில துணைத் தலைவர் கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பிச் சென்றார்.

எல்.முருகன் தலைமையில் பாஜகவில் சேர வந்த ரவுடி சூர்யா

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கே.டி.ராகவனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ” ரவுடி சூர்யா நேற்று பாஜகவில் இணைய வந்தது உண்மைதான். ஆனால், அவர் கட்சியில் இணையவில்லை “ என்றார். ரவுடி சூர்யாவை தற்போது கட்சியில் இணைய வேண்டாம் என்று எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளதாக பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் தொலைபேசி வாயிலாக நம்மிடம் தெரிவித்தார்.

பாஜகவில் சேரவந்து காவல்துறையிடம் சிக்கிய ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள்

இதனிடையே, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், மக்கள் ஒற்றுமையை சிதைக்கவும், மதக்கலவரங்களை உருவாக்கவும் மிக மோசமான ரவுடிகளை கட்சியில் சேர்த்தது போன்று, தமிழ்நாட்டிலும் அத்தகைய திட்டத்துடன் ரவுடி பட்டாளங்களை பாஜக சேர்ப்பதாகவும், இதனை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுக்க வேண்டுமென்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்.அருணன் மற்றும் உதயகுமார் ஆகியோர், தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் அனைத்தும் பாஜகவின் இத்தகைய மோசமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒருபுறம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி போன்றோர் கட்சியில் சேர்ப்பு, மறுபுறம் கொடுங்குற்றம் புரியும் ரவுடிகள் தடல்புடலாக கட்சியில் இணைப்பு. பாஜகவின் இந்த திருடன் போலீஸ் விளையாட்டு, நீண்ட காலமாக கட்சிப் பணி செய்து வரும் தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.

இதையும் படிங்க: பாஜகவில் சேரவந்த பிரபல ரவுடி; காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட்டம்

ABOUT THE AUTHOR

...view details