இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் கூட, மதுக்கடைகளை மூடுவதற்கான ஆணை இப்போது வரை பிறப்பிக்கப்படவில்லை. கரோனாவை தடுப்பதை விட மது விற்பனை செய்வதில் அரசு அதிக ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டால் அதில் முதலிடம் அளிக்கப்பட வேண்டியது மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு தான். காரணம்.. கரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மது ஆகும்.
மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும் போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக பரவி விடும். அதுமட்டுமின்றி, மது அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கி விடும் என்பதால், மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், தான் மதுக்கடைகளை மூட ஆணையிடுமாறு கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பிருந்த நிர்வாகம் மது வணிக நேரத்தை ஒரு மணி நேரம் மட்டுமே குறைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிந்தைய நிர்வாகம், வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறி, மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு மாற்றாக காலை 8 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு இன்று காலை தான் முறைப்படி பொறுப்பேற்றுள்ளது என்றாலும் கூட, மதுக்கடைகளை காலை 8 மணிக்கு திறக்கும் முடிவை இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாய்வு நடத்தி அவரது ஒப்புதலுடன் தான் அலுவலர்கள் எடுத்ததாக அறிகிறேன். இந்த முடிவு கரோனா பரவலைத் தடுப்பதற்கு பதிலாக அதிகரிப்பதற்கே இது வழி வகுக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை தான். இங்கு மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது என்பதை தமிழகத்தின் மது வணிகம் குறித்த நுட்பம் தெரிந்தவர்கள் அறிவர். மதுக்கடைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் வணிகம் மும்மடங்கு அதிகரிப்பதும், ஒரு நாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் மது வணிகம் இரு மடங்கு அதிகரிப்பதும் இந்த சூத்திரத்தின் அடிப்படையிலானது தான்.