தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் - ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பேரழிவுகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : May 29, 2020, 5:37 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பசுமைக்கு சாதகமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதற்காக 6 அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

1. இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

2. வீடுகளிலும், சுகாதார கட்டமைப்புகளிலும் தண்ணீர், துப்புரவு வசதிகளுடன் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தாங்கக்கூடிய தூய்மையான மின்சக்தியும் இருப்பதை உறுதி செய்தல்.

3. கரோனாவுக்கு பிந்தைய நாட்களில் மக்கள் தூய காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையில், காற்று மாசை குறைக்கும் தூய மின் திட்டங்களில் அதிக முதலீடு செய்தல்.

4. மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதை உறுதி செய்தல்.

5. நீடித்த போக்குவரத்தில் தொடங்கி ஆரோக்கியமான இல்லம் வரை நகர்ப்புற திட்டமிடலின் அனைத்து அம்சங்களிலும், ஆரோக்கியத்தை இணைக்கும் வகையில் மாநகரங்களை அமைத்தல்.

6. சுற்றுச்சூழலை மாசுபடுத்தி காலநிலை மாற்றத்தை விரைவுப்படுத்தும் படிம எரிபொருட்களுக்கு மானியம் தருவதை நிறுத்துதல்.

இந்த அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமின்றி தேவையானவையும் ஆகும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பிறகு, கடிவாளம் இல்லாத குதிரைகளைப் போல பொருளாதாரத்தை விரட்ட அந்த நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. அவ்வாறு செய்வது இயற்கை சமநிலையை சிதைத்து, உலகம் இதுவரை காணாத பேரழிவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

பொருளாதாரத்தை மட்டும் குவித்து வைத்து, மனிதகுலத்தையே அழிவுக்கு ஆளாக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. எனவே, கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழியில் 6 அறிவுரைகளை கடைபிடிப்பவையாக அமைய வேண்டும். அதற்காக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 2015ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை, ஐ.நா. அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உறுதி ஏற்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆள்குறைப்பு நடவடிக்கை குறித்து தகவல் சேகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு

ABOUT THE AUTHOR

...view details