சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது.
இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று அறிவித்திருக்கிறார்.
கோட்டை விட்ட தமிழ்நாடு அரசு
கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது சரியானது தான் என்றாலும் கூட, அதை விட மிகவும் முக்கியமான விஷயத்தை தமிழ்நாடு அரசு கோட்டை விட்டு விட்டது. இன்னும் கேட்டால் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு தான், மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவோம் என்று கூறும் துணிச்சலை எடியூரப்பாவுக்கு அளித்துள்ளது.
மேகதாது அணை தொடர்பான அனைத்து விவகாரங்களும் உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் நிலுவையில் உள்ளன என்பதை மட்டும் தான் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கருத்தில் கொண்டதே தவிர, மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டதா? அதனால் சுற்றுசூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை.