இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இனச் சிக்கல் குறித்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கான சதி என்பதைத் தவிர வேறில்லை.
ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நியுயார்க்கில் ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்ரஸை சந்தித்துப் பேசிய பின்னர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். கோத்தபயவின் இந்த அறிவிப்பை மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் திருந்தி விட்டதாகவும், ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருப்பது போன்றும் நினைக்கத் தோன்றும். ஆனால், இது உண்மையைப் போல் காட்சியளிக்கும் பொய் தான்.
2009ஆம் ஆண்டு இலங்கை போர் முடிவடைந்தவுடன், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்தார். அதன்பின்னர் அவர் அதிபராக இருந்த ஆறு ஆண்டுகளில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மாறாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி காலனிமயமாக்கும் பணிகள் தான் நடைபெற்றன. அப்போது பாதுகாப்புத்துறை செயலராக இருந்த கோத்தபய 2019ஆம் ஆண்டில் இலங்கை அதிபராக பதவியேற்றப் பிறகும் கூட தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்
ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் கடந்த ஜூன் மாதம் பேச்சு நடத்துவதாக கோத்தபய அறிவித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வேறு தேதி கூட அறிவிக்கப்படாமல் அப்பேச்சுகள் ரத்து செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைப்புகள் பலவற்றையும் பயங்கரவாத அமைப்புகள் என்று அறிவித்து கோத்தபய ராஜபக்சே தடை செய்தார். அடுத்த ஆறு மாதங்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பேச்சு நடத்தப்போவதாக கோத்தபய அறிவித்தால் அதை எவரும் நம்ப மாட்டார்கள்.
ஈழத்தமிழர் அமைப்புகளுடன் பேசப் போவதாகவும், சிறையிலுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்கப் போவதாகவும் கோத்தபய அறிவித்ததற்குக் காரணம் இருக்கிறது. கோத்தபய, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சிங்கள பேரினவாத சக்திகள் மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பது தான் அந்தக் காரணமாகும்.