இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் அச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது. வழக்கமாக இதுபோல் அனுப்பபடும் சட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளித்துவிடும் ஆளுநர், 3 வாரங்கள் முடிந்தும் ஒரு முக்கியமான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.
அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் இருப்பது தான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வற்கு காரணமாக இருக்குமோ? என ஐயப்படத் தோன்றுகிறது. அவ்வாறு ஐயப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. ஏனெனில், இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பது போன்று தான் ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே அமைந்துள்ளன. நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வரும் 12 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவோ, முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களிலோ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில், மருத்துவக் கல்வி கனவாகிப் போன அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சமூக நீதி வழங்க ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது.