இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரியில் உள்ள வெடி மருந்து தொழிற்சாலை பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ‘ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவோருக்கு, அந்த மாநில மொழியில் போதிய அறிவு இருக்க வேண்டும். இதை வினா எழுப்பினால், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறார்கள். வட மாநிலத்தில் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது எப்படி? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று கூறியுள்ளது.
தெற்கு தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வாக இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறை பணியாளர் நியமனமாக இருந்தாலும், வட இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுகின்றனர். இது நிச்சயம் இயல்பாக நடைபெற்றதாக இருக்க முடியாது. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதால், மொழிப்பிரச்சனை காரணமாக, அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு சரியாக சேவை வழங்க முடியவில்லை. எனவே, அங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது மட்டும் தான் இதற்கு தீர்வு என உயர் நீதிமன்றமும் கருதும் நிலையில், மத்திய அரசு பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.