இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும், கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டதாகவும், அது குறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்.
கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்நாள் 297 பேரும், 12-ஆம் தேதி 293 பேரும் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அந்த நேரங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜன் இல்லாமல்உயிரிழப்பதும் தொடர்வதாக செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய உயிரிழப்புகள் எதுவும் அரசின் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
தமிழ்நாட்டின் கள நிலவரத்தைப் பார்க்கும் போது இத்தகைய செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட முடிவதில்லை. உதாரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் முறையே 7 பேர், 14 பேர், 14 பேர், 13 பேர், 7 பேர், 9 பேர், 11 பேர் உயிரிழந்ததாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால், மதுரையில் மாநகரில் உள்ள 10 சுடுகாடுகளுக்கு மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும், அவற்றில் 90%&க்கும் கூடுதலான உடல்கள் கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி எரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்றும், அதற்காக 3 தகன மேடைகள் புதிதாக ஏற்படுத்தப்படுவதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கைக்கும், அரசு கணக்குக்கும் இடையிலான வேறுபாட்டை இது மிகத் துல்லியமாக காட்டுகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்குக் காட்டப்படும் மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. அங்கு கடந்த 8ஆம் தேதி மூவரும், 11-ஆம் தேதி ஒருவரும், 13-ஆம் தேதி மூவரும் மட்டுமே உயிரிழந்ததாகவும், 9, 10, 12, 14 ஆகிய நாட்களில் ஓர் உயிரிழப்பு கூட இல்லை என்றும் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை இருப்பதாகவும், பலரும் உடல்களை எரிப்பதற்காக காத்துக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 12-ஆம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிக்கையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 11-ஆம் தேதி மட்டுமே ஒருவர் உயிரிழந்தார்; 12-ஆம் தேதி எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்தத் தகவலை உண்மை என எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.