சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சைப் பெறுகின்றனர்.
மருத்துவமனையில், பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்று நோய், நாளமில்லாச் சுரப்பிகள் சார்ந்த கோளாறுகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியவர்களுக்கான சிகிச்சைகள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் என அனைத்துப் பிரச்னைகளுக்கும் மருத்துவச் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைக்காகவும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன.
மேலும், ரத்த நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், சரும நோய்கள், மன நலப்பிரச்னைகள் ஆகியவற்றுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கத் தனிப் பிரிவுகள் உள்ளன. கதிரியக்க சிகிச்சை, நுண்வழி அறுவை சிகிச்சை, மயக்கவியல் துறை என இங்கே இல்லாத பிரிவுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை வசதிகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களையும் கொண்டிருக்கிறது, ராஜிவ் காந்தி மருத்துவமனை.
அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறி..?:சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு சிகிச்சைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் 123 அடி நீளத்திலும், 29 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம். இதுதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அம்மா உணவகம் ஆகும். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகியுள்ளன. அம்மா உணவகத்திற்கு நாளொன்றுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சேர்த்து ஆயிரம் பேர் வருகிறார்கள். காலையில், இட்லி, பொங்கல்; மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர்ச் சாதம்; இரவு நேரத்தில் சப்பாத்தி என வழங்கப்படுகிறது.