தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினி மீது வழக்குப்பதிவு? - 9ஆம் தேதி தீர்ப்பு!

பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை மார்ச் 9ஆம் தேதிக்கு எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Rajinikanth case verdict
Rajinikanth case verdict

By

Published : Mar 7, 2020, 12:54 PM IST

சென்னையில் ஜனவரி மாதம் நடந்த துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'கடந்த 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், அவற்றுக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும்' பேசியிருந்தார்.

'பெரியார் குறித்து பொய்யான தகவலை பரப்பியதோடு, அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் வேண்டும்' என்பதை வலியுறுத்தி, திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, துக்ளக் இதழில் ராமர் சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு சென்றது தொடர்பாக எந்த ஆதார புகைப்படமும் இல்லை என்றும், 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டதாக' மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மத உணர்வைத் தூண்டி பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவித்து வன்முறையை தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்'

ABOUT THE AUTHOR

...view details