நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று (ஜனவரி 10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டி அறவழியில் போராட்டம் நடத்தினர்.
அரசியலுக்கு வரப்போவதில்லை - ரஜினி திட்டவட்டம்!
11:13 January 11
சென்னை: நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக ரஜினி அறிக்கை வாயிலாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதில், “நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து ஓர் நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து்கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.