சென்னை விமானநிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
நாளை கோவா மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக நடைபெறும் மாநில நிதி அமைச்சர்களின் மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய பொருளாதாரத்தில் சரிவு, தொழிற்சாலைகளின் மூடு விழாவால் மோட்டார் வாகனங்கள் விநியோகம் செய்பவர்கள் தங்களுடைய கடைகளை மூடிவிடும் நிலையில் சுமார் 10 லட்சம் தொழிலாளிகள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
நாளை மோட்டார் வாகன வரி சம்பந்தமான விவாதம் நடைபெறுகின்றது. அதுமட்டுமில்லாமல் கட்டுமானப்பணிகள் முடங்கி இருப்பதால் பல லட்சக்கணக்கான அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விற்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. இப்படி ஒட்டுமொத்தமாக பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில் வரியைக் குறைக்க வேண்டுமென்று மாநில நிதி அமைச்சர்கள் எல்லாம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். இது சம்பந்தமாக கவுன்சிலில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று நாளை தெரியும். இதுபற்றி மத்திய நிதியமைச்சர் பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார். அதிலும் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொழில் முனைவோருக்கான வெளிநாட்டு பயணமாக நானும் இரண்டு முறை துபாய் சென்றுள்ளேன். அதற்கு, மூலதனமும் வந்திருக்கிறது. ஆனால் நாங்கள் அதை விளம்பரப்படுத்தவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி!