சென்னை:ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோரால் செப்டம்பர் 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ‘நவராத்திரி கொலு’, பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ‘நவராத்திரி கொலு’, தற்போது 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.
விருப்பமுள்ள நபர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச் சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் 'முதலில் வருபவர்கள் - முதலில் பார்வையிடலாம்’ என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பார்வையிடும் நேரம் நான்கு கட்டங்களாக 20 பேர் வீதம் 80 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். மின்னஞ்சல் வாயிலாக அனுமதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் இரண்டாவது நுழைவு வாயிலுக்கு வர வேண்டும்.
இந்தியக் குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்; வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் கடவுச்சீட்டை காண்பிக்க வேண்டும்; பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம்; வளாகத்திற்குள் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகள் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆளுநர் மாளிகையை பார்வையிடச் செல்வதற்கான கோரிக்கையை அங்கீகரிக்கும் மற்றும் நிராகரிக்கும் உரிமை ஆளுநர் அலுவலகத்திற்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் நவராத்திரி கொலு !