பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலத்திடம் நாம் பேசிய போது, "நேற்றும் இன்றும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பண பரிவர்த்தனைகள், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள், ஏடிஎம் சேவைகள், அரசு கருவூல கணக்குகள், ஏற்றுமதி - இறக்குமதி கணக்குகள் உள்ளிட்டவை இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.
வேலை நிறுத்தம் அறிவித்ததும், மத்திய அரசின் தொழில்துறை ஆணையர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அப்போது, வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரிக்கை வைத்தோம். ஆனால், அதற்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.