சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல்துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், "நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் படி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பு அளிப்பது, தண்ணீர் தேங்கும் இடங்களை சரி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் அனைத்து காவல் அலுவலர்களும், காவலர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வருவாய்த்துறை, மாநகராட்சி மின்சாரத் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டாலும், அதை மீறி மக்கள் செல்கின்றனர். நிவர் புயலை உணர்ந்து கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.