சென்னை:குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் பொருள்கள் வழங்க வேண்டும், எக்காரணம் கொண்டும் அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆனந்த்குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், "நியாயவிலை கடைகளில் பொருள்களைப் பெற நேற்று (ஜூன்.01) முதல் நான்கு நாள்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும், ஜூன் ஐந்தாம் தேதியிலிருந்து விநியோகம் தொடங்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்க இருப்பு வைத்திருக்க வேண்டும். இதனை கண்காணிப்பு அலுவலர் தினசரி கண்காணிக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்ய உரிய நேரத்தில் நியாய விலைக்கடைகள் திறக்க வேண்டும்.
பொருள்களை வாங்க வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றி பொருள்கள் வாங்க ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் பொருள்கள் வழங்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.