சென்னை: காவல் எல்லைகளைத் தாண்டுபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என மாநகர காவல் துறை நள்ளிரவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசின் கரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, நேற்று முன்தினம் (மே 17) முதல் மாவட்டங்களுக்கு வெளியே சென்றாலும், மாவட்டங்களுக்குள்ளும் பயணிப்பதற்கு இ-பதிவு கட்டாயம் என அறிவித்தது. இச்சூழலில் ஒரு காவல் நிலைய எல்லைவிட்டு, மறு காவல் எல்லைகளுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல் துறை நள்ளிரவில் அதிரடியாக அறிவித்தது.
இதனடிப்படையில், 348 செக்டர்களில் வாகனத் தணிக்கை அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இ-பதிவு குறித்தும், காவல் நிலைய எல்லையைத் தாண்டி செல்லக் கூடாது என்ற அறிவிப்பு குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் பலர் வாகனங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றனர்.
செய்வதறியாமல் திணறிய மக்கள்:
அப்போது, அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர், இ-பதிவு செய்துள்ள நபர்களை மட்டுமே அனுப்பி வைத்தனர். இதனால் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது அட்டோவில் வந்த கரோனா நோயாளி, இறப்பிற்காக சென்றவர்கள், அவசரத் தேவைக்காக செல்லக்கூடிய நபர்களிடம் இ-பதிவு செய்ததற்கான ரசீதை கேட்டதால், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரிடமும் இ-பதிவு கேட்டதால், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலில் அவசர ஊர்தி, சிக்கி நீண்ட நேரமாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. நள்ளிரவில் வெளியான அறிக்கையால் செய்வதறியாமல் நின்றனர். பின்னர் அரை மணி நேரம் கழித்து அனைவரையும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசின் உத்தரவு
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மே மாதம் 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கபடும் என அரசு அறிவித்தது. அத்தியாவசிய பொருட்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணிக்குள் வாங்கிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசியத் தேவைகள் தவிர, பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.
அதன்படி, மே 10ஆம் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், தெருக்களிலும் சுற்றி திரிந்தனர். காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தால் மருத்துவம், உணவு என இதர காரணங்களைக் கூறுவதால் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறினர். இதனால் வழக்கமான நாட்களை போலவே ஊரடங்கும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே கரோனாவைக் குறைக்க முடியும் என அரசியல் அமைப்பினர் கூறிவருகின்றனர். அதனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நேரத்தை 2 மணி நேரம் அரசு குறைத்தது. இதுமட்டுமின்றி மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயம் என்ற முறையையும் அமல்படுத்தியது.
இதையும் படிங்க: இ-பதிவு கட்டாயம்: தீவிரமடையும் விதிமுறைகள்!