சென்னை:தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய வழக்கில், பப்ஜி மதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.
கைது செய்யப்பட்டபோது பப்ஜி மதனிடமிருந்து ஆடி ஆர்8 மற்றும் ஆடி ஏ6 ஆகிய இரு சொகுசு கார்கள் சைபர் கிரைம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா பிணையில் வெளியே வந்து, தங்களிடம் சொகுசு கார்கள் இல்லை எனவும், காவல் துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படும் ஆடி ஆர்8 கார் தங்களது கார் இல்லை எனவும், ஆடி ஏ6 என்ற ஒரே கார் தான் உள்ளதாகவும் தெரிவித்த கருத்து வைரலானது.
இந்த நிலையில் சொகுசு கார் இல்லை எனக்கூறிய மதனின் மனைவி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
பல கோடி ரூபாய் பணம் மோசடி
அதில் காவல்துறையினர் தங்களிடமிருந்து பறிமுதல் செய்த இரண்டு ஆடி கார்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும்; மேலும் ஆடி ஏ6 காரை 13 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், ஆடி ஆர்8 காரை 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், பொறியாளரான தானும், தனது கணவர் மதனும் யூ-ட்யூப் மூலமாக சம்பாதித்த பணத்தில் காரை வாங்கியிருப்பதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அலுவலகம் செல்வதற்கு கார் தேவைப்படுவதாகவும், வழக்கிற்கு சம்மந்தமில்லாமல் பறிமுதல் செய்த, தங்களது காரை ஒப்படைக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது விசாரணையில் இருந்து வருகிறது.
இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கேட்ட போது, ”இரு கார்களும் பப்ஜி மதன் மற்றும் மனைவி பெயரில் இல்லை. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட காரை பெயர் மாற்றாமல் வாங்கி வைத்திருக்கின்றனர்’ எனக் கூறியுள்ளனர்.
மேலும் பப்ஜி மதன் ஊரடங்கு காலத்தில், பல பேரிடம் உதவி செய்வதாகக்கூறி, பல கோடி ரூபாய் பணத்தைப்பெற்று மோசடி செய்து, அதன் மூலமாக ஆடி கார் வாங்கியிருப்பதாக சந்தேகம் எழுந்ததால் காரை பறிமுதல் செய்ததாகவும் இதுகுறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ்