பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரிடையே மாமல்லபுரத்தில் இருநாள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இருநாட்டுத் தலைவர்களிடையேயான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உயர் மட்ட அலுவலர்கள் குழுவின் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, "மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்" என்று தமிழில் தன் உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் கலாசார ரீதியிலும் வணிக ரீதியிலும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் பெரும் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருந்துள்ளன. வுஹான் உச்சி மாநாடு இருநாடுகளின் உறவுகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றைய சந்திப்பு இந்தியா-சீனா உறவுகளிடையே உருவாகும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்" என்று பேசினார்.
மேலும், "இருநாடுகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிப்போம், அவற்றை பெரும் சிக்கல்களாக மாற அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் உறவு உலகின் ஸ்திரத்தன்மைக்கும் அமைதிக்குப் பங்களிப்பதுமாய் அமையும்" என்றார்.