ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாகத் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. அண்மையில் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசியவை குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை போயல் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான சாவியோ ரோடிரிகுவிஸ் (Savio Rodrigues) இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரஜினிகாந்தின் பார்வையில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், மாற்றத்தை ஏற்படுத்த அவரின் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்துடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சாவியோ, தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என ரஜினி விரும்புவதாகவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலன் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். இளம் தலைவர்களை வளர்த்தெடுக்கும் ரஜினியின் சிந்தனை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.