சென்னை: சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை மற்றும் கோவையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது உறவினர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு அனுமதி பெற்று தர உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் எண் என போலியான ஒரு எண்ணை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் கோவை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தையும், பெயரையும் வாட்ஸ் அப்பில் போலியாக பயன்படுத்தி, அவரிடம் சாட் செய்து வந்துள்ளார்.
போலியான வாட்ஸ்அப் சாட்டை உண்மை என நம்பிய முகேஷ் குமார் புரோகித்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் கஃபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், நேரடியாக அதிகாரிகள் லஞ்சம் வாங்கமாட்டார்கள் என்பதால் தன்னிடம் பணம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுத்து அனுமதி பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.
இதன் பேரில் சென்னையில் இருந்து முகேஷ் குமார் புரோகித் கோவைக்கு புறப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 12ஆம் தேதி நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை முகேஷ் குமார் புரோகித் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கஃபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார்.