சென்னை புறநகரில் அமைந்துள்ளது கண்ணகி நகர். இங்குள்ள இளைஞர்கள் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி காவல்துறையினர் அங்கு அடிக்கடி சென்று விசாரணையில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு, கண்ணகி நகருக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சென்றனர்.
அப்போது குப்பைகள் நிறைந்த காட்டுப்பகுதியை, அப்பகுதி இளைஞர்கள் சுத்தம் செய்து வாலிபால் மைதானமாக மாற்றிய இடத்தை, காவல்துறையினர் சேதப்படுத்தி சென்றுள்ளனர். கண்ணகி நகர் இளைஞர்கள் பாதை தவறுகிறார்கள் என்று கூறும் காவல்துறையினரே, வாலிபால் மைதானம் உருவாக்கி, விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவர்களை ஊக்குவிக்காமல், மைதானத்தை சேதப்படுத்தியது, அப்பகுதியினரிடையே வேதனையை உண்டாக்கியது.
பின்னர் இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமனிடம் கண்ணகி நகர் இளைஞர்கள் சமூகவலைதள பக்கம் மூலமாக புகாரளித்தனர். இதையறிந்த துணை ஆணையர் விக்ரமன், உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களை கண்ணகி நகருக்கு அனுப்பினார். அங்கு சென்ற உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தன் சொந்த செலவிலேயே, சேதப்படுத்தப்பட்ட வாலிபால் மைதானத்தை சீர்செய்ததுடன், இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களையும் வாங்கி கொடுத்தார்.