சென்னை: எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (55). இவர் பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பூர் கிழக்கு பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கும் தனது மகள்களுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் “எனது எதிர் வீட்டில் வசிக்கும் பாஜக பிரமுகர் பார்த்தசாரதி, தொடர்ந்து எனக்கும், எனது மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.
இது குறித்து 2018ஆம் ஆண்டே கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது, பார்த்தசாரதியை காவல் துறையினர் கைது செய்த நிலையில், அன்றைய தினமே ஜாமீனில் வெளியே வந்தார்.
பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
வெளியே வந்த பார்த்தசாரதி மீண்டும் எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக பார்த்தசாரதி மீது ஆபாசமாக திட்டுதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், அனுமதி இல்லாமல் பெண்ணை கண்காணித்து புகைப்படம் எடுத்தல், மிரட்டல், அவமித்தல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆந்திராவில் வைத்து கைது
மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர், பார்த்தசாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தலைமறைவாகவுள்ள பார்த்தசாரதியை எம்கேபி நகர் மகளிர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஆந்திரா மாநிலம் சித்தூரில் பதுங்கியிருந்த அவரை இன்று (ஆக.26) கைது செய்தனர். தற்போது அவர் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை