சென்னை:நடிகை மீரா மிதுன் தனது வலையொளி (யூ-ட்யூப்) பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறையில் மீரா மிதுன்
இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுனை சென்னை எம்கேபி நகர் காவல் துறையினர், மற்றொரு வழக்கில் நேற்று (ஆக.26) கைது செய்தனர்.
30 பக்க குற்றப்பத்திரிகை
பின்னர், தொழிலதிபர் ஜோ மைக்கேல் என்பவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மீரா மிதுன் மிரட்டியதாக கடந்த 2019ஆம் ஆண்டு எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரில் வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி இந்த வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2 பிரிவுகளில் வழக்கு
இதே போன்று 2019ஆம் ஆண்டு எழும்பூரிலுள்ள நட்சத்திர விடுதி மேலாளரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் நிலையத்தில், அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தற்போது எழும்பூர் காவல் துறையினர், மீரா மிதுன் மீது 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாயுமா?
இதேபோன்று சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசி வருவதாக தொழிலதிபர் ஜோ மைக்கேல் கொடுத்த புகாரில் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கில் கடந்த 26 ஆம் தேதி மீரா மிதுனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீரா மிதுன் மீது சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறை உயர் அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்