சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்திவருபவர் கமலேஷ் ஜெயின் (37). கடந்த மாதம் 30ஆம் தேதி இவரது கடைக்கு நகை வாங்குவதற்காக ஒருவர் வந்துள்ளார். அப்போது கமலேஷ், அவரிடம் 30 சவரன் மதிப்புள்ள தங்க செயின்களைக் காட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நபர், நகைகளுடன் சாலையில் ஓடிச் சென்று அங்குத் தயாராக நின்றிருந்த, அவரது நண்பனின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார். இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் கமலேஷ் புகார் செய்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனத்தின் நம்பர் தெளிவாகப் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
அடகுக் கடையில் இருந்த திருட்டு நகை மீட்பு
விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்திய வாகனம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினோத் (32) என்பது தெரியவந்தது. உடனே வந்தவாசிக்கு விரைந்த சங்கர் நகர் குற்றப்பிரிவு காவல் துறையினர், அங்கு வீட்டில் இருந்த வினோத்தை கைதுசெய்து, சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.