இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஊரடங்கின் காரணமாக பல நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க, வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை 31 நாடுகளில் இருந்து 149 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கென ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை. அண்டை மாநிலமான கேரளத்திற்கு 31 விமானங்கள் இயக்கப்படும்போது, தமிழர்களுக்காக ஒரு விமானம் கூட இயக்கப்படாதது திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். அந்த நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் கடும் அச்சத்தில் உரைந்துள்ளனர். தங்களை உடனடியாக தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான் அவர்களின் முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது. மே 22 ஆம் தேதி வரை குவைத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாது என்றால், அதற்குள்ளாக தங்களில் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகி விடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மற்ற நாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் மனநிலையும் இப்படியாகவே உள்ளது.