இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மின்சாரத் துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உழவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் இந்தத் திருத்தம் திரும்பப் பெற வேண்டியதாகும்.
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள மின்சார சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், ஏழைகளும், உழவர்களும் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய மின்சார சட்டத்தின் 45 ஆவது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65 ஆவது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது. இந்த இரு பிரிவுகளிலும் செய்யப்படவுள்ள திருத்தங்களின் மூலம், மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படும். மாறாக, பயனாளிகளுக்கு மாநில அரசு விரும்பினால் நேரடியாக மானியம் வழங்க வகை செய்யப்படும்.