இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொண்டது. அங்கு அளவுக்கதிகமான பணியாளர்களும், ஆசிரியர்களும் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்களை பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்வதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை குறைக்க முடியும் என்றும் அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அலுவலராக பணியாற்றிய சிவதாஸ் மீனா அரசுக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ’சி’ மற்றும் ’டி’ பிரிவுகளைச் சேர்ந்த 3,600 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றி பணியமர்த்தப்பட்டனர். அப்போது, அண்ணாமலை பல்கலைக்கும், பணியாளர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், பணியாளர்கள் பிற அரசுத்துறைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும், அதன்பின் அவர்கள் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.