இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி, ஒரே ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணியைப் பொறுத்தவரை 735 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 38 ஓபிசிக்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர் பணிக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, பெரும்பான்மையான பேராசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படாமல், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களில் இருந்து பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. பல நேரங்களில் பதவி உயர்வு மூலமான பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வேண்டியவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் தான் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிக்கு ஓபிசிகளால் வர முடியவில்லை. உதவிப் பேராசிரியர்கள் முழுக்க முழுக்க நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவதால் தான், அனைத்து சதிகளையும் முடியடித்து, அப்பதவிகளில் சுமார் 16% இடங்களை ஓபிசி வகுப்பினர் பிடித்துள்ளனர். பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிகளும் முழுக்க, முழுக்க நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டால், அவற்றை ஓபிசிகள் அதிகளவில் கைப்பற்றுவர் என்பது உறுதி.