தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும். ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழ்நாடு அரசு சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு தேவை - ராமதாஸ்
சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு, மக்களின் கடமை ஆகும். நீர் ஆதாரங்களை பராமரிக்கும் நோக்குடன் ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திருவிழா நடத்தி, ஏரி - குளங்களை தூர்வார வேண்டும். தண்ணீர் வீணாகாதபடி மழைநீர் வடிகால்கள் வலிமையாக கட்டமைக்கப்பட வேண்டும்.
போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழ்நாடு முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.