தமிழ்நாடு

tamil nadu

சூழலியல் பிரச்னைகளுக்கு பிளாஸ்டிக் தடை தீர்வா?

By

Published : Sep 28, 2019, 12:25 PM IST

சென்னை: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சூழியல் சிக்கல்கள் பிளாஸ்டிக் தடையின் விளைவுகள் குறித்த ஒரு பார்வை இதோ...

Climate change

நவீன யுகத்தில் பிளாஸ்டிக்கின் ஆக்கிரமிப்பு:
தற்போதுள்ள நவீன யுகத்தில் பிளாஸ்டிக் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிவிட்டது. அன்றாடம் பயன்பட்டில் உள்ள பெரும்பாலானவை பிளாஸ்டிக் பொருட்களாகவே உள்ளது. தொழில்நுட்ப யுகமான இந்த காலகட்டத்தில் முக்கியத் தொழில்நுட்ப கருவிகள் பிளாஸ்டிக்கால் ஆனவையே. அனைவரும் உபயோகிக்கும் செல்போன், கணிணி என அனைத்து கருவிகளும் பிளாஸ்டிக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. தனது நெகிழ்வுத்தன்மையின் காரணமாக முக்கிய கருவிகளின் பயன்பாட்டுக்கு எளிமையான தோற்றத்தில் உருவாக்க பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்றியமையாததாக மாறிப்போனது. உதாரணமாக, பிளாஸ்டிக் பாகங்கள் இல்லாமல் கணினி உருவாக்கப்பட்டிருந்தால் இன்னும் ஒரு பெரிய அறையின் அளவுக்கு கணினி இருந்திருக்கும்.

இத்தனை பயன்பாடுகளை கொண்டிருந்தாலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவை. புவி வெப்பமயமாதல் பிரச்னை தற்போது தீவிரமடையத் தொடங்கியவுடன் உலக மக்களின் பார்வை சூழழியல் பக்கம் திரும்பியுள்ளது. பயன்பாடு முடிந்தபின் கழிவுகளாக மாறும் பிளஸ்டிக்கை, பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தி கடலிலேயே பெரும்பாலும் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

மலையாக குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு

பிளாஸ்டிக் தடையும் வணிக விளைவுகளும்:
வாழும் பூமிக்கே அச்சுறுத்தலாய் விளங்கும் பிளாஸ்டிக்கை ஓட்டுமொத்தமாக தடை செய்வதே சரியான முடிவு என்ற பொதுக்கருத்து நிலவிவருகிறது. அதற்கு வலு சேர்க்கும்விதத்தில் பிரதமர் பிளாஸ்டிக் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். காந்தி பிறந்தநாளான வரும் ஆக்டோபர் இரண்டாம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே இதனால் ஏற்படும் வணிக சிக்கல்கள் குறித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கலக்கதில் உள்ளனர். அரசின் இந்த முடிவால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்று அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த தடையால் 10 ஆயிரம் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும் என்றும், மேலும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரதமர் மோடி

பிளாஸ்டிக் தடையின் பாதிப்பு துரிதமாக விற்பனாயாகும் நுகர்வு பொருட்கள் எனப்படும் FMCG மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு ஆண்டில் 10.6 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என வர்த்தக துறையின் கீழ் செயல்படும் பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தரவுகள் கூறுகின்றன. நாடு தற்போது பொருளாதார மந்த நிலையை சமாளித்து வரும் வேளையில் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வரும் பிளாஸ்டிக் துறைக்கு தடை விதிக்கக்கூடாது என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வாதிடுகிறார்கள். பிளாஸ்டிக் தடையால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்கிறது தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம். இது தொடர்பாக பேசிய அந்த சங்கத்தின் தலைவர், "மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தனி நபர் பிளாஸ்டிக் நுகர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவில் தனி நபர் பிளாஸ்டிக் நுகர்வு 109 கிலோவாக உள்ள நிலையில், இந்தியாவில் இது வெறும் 11 கிலோவாகவே உள்ளது. இந்த தடையால் தமிழகத்தில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்" என்றார்.

"தமிழக அரசின் தடைக்குப் பிறகு ஏராளமான பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் ஆந்திராவிக்கு இடம்பெயர்ந்து விட்டது. இந்த தடையால் சட்டபூர்வமாக பிளாஸ்டிக் உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. அதேநேரத்தில் சட்டவிரோத ஆலை மூலம் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்தசாலை

சூழிலியல் சிக்கலின் எதர்த்தமும் தீர்வும்:
அதேவேளை பிளாஸ்டிக் தடை மட்டும் சூழலியல் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வாகுமா என்ற கேள்வி எழுகிறது. மின்சாதனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், வகைப்படுத்தப்படாத பிற திடக் கழிவுகள் என பிளாஸ்டிக் அல்லாத மற்ற குப்பைகளும் சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தி வருகின்றன. அவை குறித்து மக்களோ, அரசுகளோ பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்படுகிற்து. "கண்ணுக்கு பளீச்சென்று தெரிவதால்" பிளாஸ்டிக்கின் மீது பழி சுமர்த்தப்படுகிறது என்கின்றனர் பிளாஸ்டிக் பொறியியல் துறை வல்லுநர்கள். பிளாஸ்டிக் என்பதற்கு மாற்று தேடுவதைவிட அவற்றை முறையாக பயன்படுத்த நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என பிளாஸ்டிக் துறை நிபுணர்களும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொறியியல் துறை பேராசிரியர்களும் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவு பிரச்னைக்கு ஒரே தீர்வு மக்களின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே என்கின்றனர் சிப்பெட் அமைப்பின் அதிகாரிகள். பிளாஸ்டிக் குப்கைகளை சாலைகளில் தூக்கி வீசாமல் முறையாக குப்பைத் தொட்டிகளில் போட்டு, அவற்றை தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்கிறாார்கள். தவிர்க்கமுடியாத பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை கழிவு மேலாண்மை மூலம் சீர்செய்யலாம் என்பதே துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்

மாநிலங்களவை உறுப்பினரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், பருவநிலை சிக்கல்களை அவரச நிலையாக பிரகடனப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். தற்போது நம் கண் முன்னே நிற்கும் பிரச்னைகளில் இதுவே தலையாயது என குறிப்பிடும் அவர், மரபு சார்ந்த எரிபொருள் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனம் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், நீர் நிரப்பப் பயன்படும் பைகள், பிளாஸ்டிக் தூக்குப் பைகள், உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதன்பின் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக இல்லாமல் போகவில்லை என்றாலும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பாக கடைகள், உணவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. பிளாஸ்டிக் தடை என்பது வரவேற்புக்குறிய ஒன்று என்றாலும் அதன் நடைமுறை சாத்தியங்களையும், அதற்காக மக்கள் கொடுக்கும் விலை என்ன என்பதே பிரதானமான கேள்வி.

ABOUT THE AUTHOR

...view details