சிவாஜி கணேசன்
இந்தியாவின் முதல் திரைப்படமான 'ராஜா அரிச்சந்திரா'வை தயாரித்தவர் தாதா சாகேப் பால்கே. அவரின் பெயரில் திரைப்படத் துறையின் முன்னேற்றத்துக்காகச் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது.
1952இல் 'பராசக்தி' மூலம் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்கா பட விழாவில் விருது கிடைத்தது. நடிப்புக்காகப் பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், அகில இந்திய விருது கிடைக்காதது பெரும் குறையாகவே இருந்தது.
பால்கே விருது சிவாஜிக்கு வழங்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதனையடுத்து, 1997ஆம் ஆண்டுக்கான 'பால்கே' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
1928ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி பிறந்த சிவாஜியின் இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. 'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் அவர் முத்திரைப் பதித்துள்ளார். அனைவரையும் வசீகரிக்கும் கம்பீரக் குரல், உணர்ச்சிப்பூர்வமான உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்கொண்ட சிவாஜி, நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்களான மனோகரா, ராஜராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத் தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றேதான் சொல்ல வேண்டும்.
பாசமலர், பாவ மன்னிப்பு பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, ஆலயமணி, ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், தெய்வமகன், சிவந்த மண், வியட்நாம் வீடு, வசந்த மாளிகை, ராஜபார்ட் ரங்கதுரை உள்ளிட்ட திரைப்படங்கள், இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
இந்நிலையில், பால்கே விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் இயக்குநர் பாலசந்தர் இடம்பெற்றிருந்தார். சிவாஜிக்குப் பால்கே விருது கிடைத்தது தொடர்பாக இயக்குநர் பாலசந்தர் கூறுகையில்,
"எண்ணற்றப் படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் உலகப்புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்தது.
சிவாஜிக்கு விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த, ஆனால் சிவாஜி அதனைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. 'நம்ம, நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
பால்கே விருது தேர்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றபோது, பலர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் நான் எழுந்தேன். 'இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்துகொண்டார்.