தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2021, 3:23 PM IST

ETV Bharat / city

Kodanad Case - ஈபிஎஸ்,சசிகலாவை விசாரிக்கக்கோரிய மனு:பதிலளிக்க அவகாசம் கேட்ட காவல் துறை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கோடநாடு கொள்ளையில் ஈபிஎஸ்ஸை விசாரிக்கக்கோரிய மனு
kodanadu heist cum murder case

சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

9 பேரை விசாரிக்க தாக்கல் செய்த மனு

இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், நீலகிரி முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சசிகலாவுக்குத்தான் தெரியும்

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று(நவ.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: இளைஞர் மரணம் - காவல் ஆய்வாளரின் மனிதநேய முயற்சி வீணான சோகம்

ABOUT THE AUTHOR

...view details